Sunday, September 19, 2021

கிழித்த கடித்ததுக்கு தலைப்பெதற்கு ?


'அன்பே' என்று ஆரம்பிக்கக்கூட அச்சமாக இருக்கிறது, அது ஆல்கஹால் வீச்சமெடுக்கும் அசிங்க வார்த்தையென்று நீ சொன்ன பிறகு. ஏதோவொரு கடிதத்தில்  உடல்முழுதும் இரை தேடும் விஷக் கொடுக்குகள் முளைத்த கொடூர மிருகமொன்றை வரைந்து அதற்கு 'அன்பு' என்று பெயரிட்டு பிறகு அதை ரா முழுதும்  கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து காற்றில் உயர எறிந்திருக்கிறேன். எத்தனை முறை, திறந்த பேனாவுடன் விடிய விடிய விளக்கெரித்து  விட்டு வெற்று வெள்ளைக் காகிதங்களை  மனப்பிறழ்வோடு கசக்கிக்கிழித்திருக்கிறேன். வெறுமையாக இருந்ததால் அதில் ஒன்றும் இல்லை என்று நீ நினைத்தால்  அது உன் சபிக்கப்பட்ட அறியாமையே. வடிக்கப்படாத வார்த்தைகளின் வன்மம் நீ அறிய முடியாது. வார்த்தைகளால் புறக்கணிக்கப்பட்ட வெள்ளைக் காகிதத்தின் ஓலம் உன் காதுகளில் நுழையாது. மொத்தக் கடிதங்களிலும் அந்தக் கடிதங்களே மிகவும் துயரமானவை.

Thursday, September 16, 2021

வாதை கொண்ட பெருமிருகம்


 

முன்னம் ஒரு மிருகம் இருந்தது

தீரா வேட்கையுடன் 

மனவிருட்சங்களின் அடிப்பொந்துகளில் 

முள்வேலிகட்டி வசித்த

வாதை கொண்ட அப்பெருமிருகம் 

வயிற்றை நிரப்ப அன்பை மட்டுமே உண்ணும்

 

முன்னம் ஒரு மிருகம் இருந்தது

பாசப்பசியெடுக்கும் போதெல்லாம்

அருகிலிருப்பவைகளின் கழுத்துகளை

தன் கோரப்பற்களுடன் 

அது வெறித்துக் கொண்டிருக்கும்

..........................................................

கொடுத்துத் தீர்ந்தவைகளும்

காதற்கருமிகளும்

பற்தடங்களில் 

கருநீல நிறத்திலான திரவம் வழிய

ஓடுபாதைகளில் குருதித் தடம்பதித்து

அலறி மறைந்தன

 

முன்னம் ஒரு மிருகம் இருந்தது

அடங்கா வேட்கைக்கு

ஆகா மருந்தான

தனிமையை தின்னத் தொடங்கியிருந்தது

அதுவும் தீர்ந்தபின்

நித்திய நோன்பிருந்த

அதன் தொண்டைக்குழியில் 

கருஞ்சிலந்திகள் வலையிட்டிருந்தன

 

முன்னம் ஒரு மிருகம் இருந்தது

இப்போதெல்லாம்

ஏதேனும் நேசச்சொல் நெருங்கிவரின்

எலிகளின் மூத்திரவாடையடிக்கும்  மூலைகளில்

அது மூச்சைப்பிடித்து ஒளிந்துகொள்கிறது....

 

எனதிசையின் மரணம்

 


பழுப்பு நிற புழுக்கள்

புசித்து மிஞ்சிய சடலத்திலிருந்து 

மிக மெல்லிய இசை துளிர்க்கிறது

அவை மழைத்துளிகள் ஓரிலை நுனியினின்று

தெப்பத்திற் தெறிப்பதற்கு முன்பான

மிக சன்னமான இசையை ஒத்திருக்கிறது 

எடையற்ற அவ்விசைக்குறிப்புகள்

காற்றுக்கும் மணல்வெளிக்குமிடையில் ஓவியமாகி

சிற்றோடைக்கும் சிறுபாறைகளுக்குமிடையில் ரகசியமாகி

அடங்கா ஆறுகளுக்கும் தடுப்பணைகளுக்குமிடையில்

ஏக்கம் பெருகி

நீலக்கடலுக்கும் நீளும்கரைகளுக்குமிடையான

மாரடிப்பில் மரித்துப் போகிறது

இவ்வாறாக எனதிசையின் மரணம் 

இனிதே நிகழ்கிறது....


பாலைவனத்துச் சூரியத்தனிமை

 



பாலைவனத்துச் சூரியத் தனிமை
இங்கு ஒற்றைச் சிறகு மறைக்கும் கதிரே
மற்றைச்சிறகின் மீதான நிழல்

விருட்சங்கள் வெளியேறிய வனம் இது

நிரம்பிச் சரியும் பாலைநிலத்துகள்கள் எல்லாம்
ஒளிபட்டு மின்னும் தங்க மீன்களாகவும்
கடற்குதிரைக் கூட்டமாகவும்
பார்வைக் குடுவையில் வழியும்

கரையே கடலாகவும்
கடலே உடலாகவும்
கலந்து கரைந்துருகிக் கிடக்குமிடத்து
தன் உறுபசி ஆற்றும் அமுதம்
எந்த மணல்மேட்டில் வழிகிறதென்று தேடியலைகிறது
நண்டுகள் நடந்த சுவடுகளைப் பின்பற்றி

அந்த பாலைவனத்து பட்டாம்பூச்சி

மழையிரவு

 


நான்குவழிச்சாலை நெடுகிலும்

நள்ளிரவில் மினுக்கும்
பூனையின் கண்கள் 
வேவு பார்ப்பது யாரையெல்லாம் ?

 

விரையும் வாகனங்களின்
நகப்பூச்சுகளில் சொட்டுவது
யாருடைய  மரணத்தின் மிச்சம் ?

 

மழையெச்சில் வழிய தொங்கும்
மரத்தின் நாக்குகள் காத்திருப்பது
எதை விழுங்க ?

 

இருத்தல் குறித்த
யாதொரு அசைவுமற்று கனக்கும்
இந்த வாழ்க்கையை
யாரிடம் கைமாற்ற ?


அடியாழத்து மீன் கூட்டம்


 பொங்கி நுரைக்கும் பெருங்கடலின்

அடியாழத்து மீன் கூட்டம்

நெளிந்து நீந்தி இசைக்கின்ற

ஏக்கம் நிறைந்த பாடலொன்றின் அலை

எதிர்பார்ப்பின் துகள்கள் பரப்பிய

கரையின் நீட்சியில்

இலக்கற்று பாவும்

என் துவண்ட கால் விரல்களை

நக்கி ஈரப்படுத்துகிறது...


சதிராடும் மேகங்கள்

 



(உச்சநீதிமன்றத்தில் LGBT உறவுகளுக்கான சட்டபூர்வ அனுமதி கிடைத்ததை ஒட்டி 2010ல் எழுதிய இந்தக்கதையை இன்று பதிகிறேன்)

அப்போது எனக்கு நான்கு வயது தான் இருக்குமென நினைக்கிறேன், நாகர்கோவில் பக்கம் தென்னையும், மாவும் அடர்ந்த தோட்டம் அமைந்த ஒரு தனி வீட்டில் குடி இருந்தோம். எப்போதுமே எனக்கு அந்த வீடு பிடிக்கும். அந்த வீடு மட்டுமல்ல, எதிர்த்த வீட்டு லைப்ரேரியன் மாமா, சுமதியக்கா, அப்புறம் அவர்கள் வளர்த்த பச்சைக்கிளி எல்லாம் பிடிக்கும். அந்தக் கிளியை ரதி என்று தான் கூப்பிடுவார்கள். அது என்னிடம் மட்டும் வரவே செய்யாது. நான் கையை நீட்டினால் தலையை சிலுப்பிக் கொண்டு கடிக்க வரும். பழம் ஏதும் குடுத்தால் கூட கடிக்க வரும். ஆனாலும் அது அழகாக இருக்கும். அவர்கள் வீட்டில் உட்கார்ந்து அதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். சுமதி அக்கா சொல்வாள் அது மந்திரக் கிளியென்று. ஒரு மனிதரை முற்றிலும் வேறு ஒருவராக மாற்றும் வித்தை அதற்குத் தெரியுமென்றும் சொன்னாள். அதைக் கேட்ட பிறகு அந்தக் கிளியின் மேல் எனக்கு கொஞ்சம் பயம் தான். பக்கத்திலே போகாமல் தூரமாக நின்றே அதன் விளையாட்டைப் பார்ப்பேன். எங்கள் வீட்டைச் சுற்றிலும் தோட்டம். வெயிலே தெரியாது. விசாலமான மொட்டை மாடி. யார் வந்தாலும் ஓடியாடி விளையாடலாம். இருட்டில் தான் கொஞ்சம் பயம். மரப்பட்டி வருமாம். பகலில் மரப்பட்டி பாதாள உலகத்தில் சென்று ஓய்வெடுக்குமாம். அதனால் பகலில் மட்டும் தான் நான் மாடிக்குச் செல்வேன். வசந்தகாலம் தொடங்கிவிட்டால் போதும், வீட்டைச் சுற்றியும் மொட்டை மாடி தரை முழுவதும் அத்தனை மாம்பூக்கள் கொட்டி பரப்பியிருக்கும். அவற்றை கையால் அள்ளியெடுத்து வானத்தில் வீசி எனக்கு நானே பூமாரி பொழிந்து கொள்வேன். கைக்கெட்டும் கிளைகளில் இருந்து மாம்பூக்களைப் பறித்து வாயில் போட்டு மெல்லுவதும் உண்டு. துவர்ப்பாக இருக்கும். அந்த ருசியும் மணமும் எனக்குப் பிடித்திருந்தது.